நீட் தேர்வில் 2 முறை வெற்றி பெற்றும் அரசுப்பள்ளி மாணவி கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் அவலம்!

Photo of author

By Sakthi

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி சன்னாசி, மயில் தாய், கூலித் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு 4 மகள்கள் இருக்கிறார்கள். விவசாய பணிகளுக்கு சென்று அதில் கிடைக்கும் தொகையை வைத்து 4 மகள்களையும் படிக்க வைத்தார்கள். மூத்த மகளான தங்கப்பேச்சி விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் சென்ற 2020 ஆம் வருடம் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து நீட் தேர்வெழுதி அதில் வெற்றியும் அடைந்தார். உள் இட ஒதுக்கீடு கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. கல்வி கட்டணத்தை தவிர்த்து உணவு, தங்கும் விடுதி, போன்ற கட்டணங்களை செலுத்த பணவசதி இல்லாததால் கல்வியைத் தொடர இயலவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டே படித்து இந்த வருடத்தில் மறுபடியும் நீட் தேர்வு எழுதினார். இதில் 256 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

அரசு இட ஒதுக்கீட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற மூகாம்பிகையின் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்திருக்கிறது. அரசு கல்வி கட்டணத்தை செலுத்தி விடுவதாக தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், உணவு, தங்கும் விடுதி, பேருந்து கட்டணம், போன்ற மற்ற செலவினங்களுக்கு பணம் இல்லாத சூழ்நிலையில், மருத்துவ கனவை மறந்து விட்டு மறுபடியும் விவசாய பணியை தொடர்கிறார் அந்த மாணவி.

இது தொடர்பாக மாணவி தங்கப்பேச்சி தெரிவிக்கும்போது, குடும்ப சூழ்நிலை காரணமாக, செலவு செய்ய இயலவில்லை. அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் எனக்கு உதவி புரிந்தால் நான் மருத்துவரான பிறகு அந்த கல்வி கடனை திரும்ப செலுத்த தயாராக இருக்கிறேன். மருத்துவருக்கு படித்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்ப்பேன் என்று தெரிவித்தார். இந்த மாணவிக்கு உதவ விரும்புபவர்கள் 9025479429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.