விருந்துக்கு வந்த கல்லூரி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்!
தாராபுரம் அருகே காணாமல் போன கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி மேல்கரைபட்டி சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் சூரியகுமார் வயது இருபத்தி ஒன்று. இவர் கரூர் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் இருந்ததால், இவர் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் படிப்பைத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தாராபுரம் அருகே கொண்டரசம்பாளையத்தில் உள்ள அவரது அத்தை மீனாட்சியின் வீட்டிற்கு வந்தார். அத்தை விருந்துக்கு தயார் செய்த நிலையில் திடீரென்று சூரியகுமார் காணவில்லை. வேறு பகுதிக்கு செல்வதாக அத்தையிடம் கூறாததால் அவரது அத்தை அதிர்ச்சி அடைந்துவிட்டார். இதையடுத்து அவரை பல்வேறு இடங்களிலும் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் நேற்று காலை அவரது அத்தை மீனாட்சி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் எல்லாம் அவரைத் தேடி பார்த்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சூரியகுமாரின் காலடிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் தீயணைப்பு துறையின் அலுவலர் ஜெயச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி சூரியகுமார் உடலை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவர் கிணற்றில் அவரே விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.