விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர்களின் நஷ்டத்தை தவிர்க்க இதை செய்வது கட்டாயம்! தகவல் சொன்ன கலெக்டர்!
இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள்தான் பெருமளவு பாதிப்பை அடைகிறார்கள். ஏனெனில் சில இடங்களில் அப்போதுதான் நாம் விதை விதைத்திருப்போம். சில இடங்களில் நாம் அறுவடை செய்யும் தருவாயில் இருப்போம். ஆனால் எதிர்பாராதவிதமாக கன மழையோ அல்லது சூறாவளி காற்றோ ஏற்படும் போது நமக்கு பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து லாபமே இல்லாமல் நஷ்டத்தில் போகிறது.
நாம் பொதுவாக கைபேசி, டிவி, வாகனங்கள் போன்றவற்றிற்கு காப்பீடு செய்வோம் இல்லையா? அதை தற்போது பயிர்களுக்கும் செய்வதாக கூறி உள்ளனர். அப்போதுதான் நஷ்ட ஈடு பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
அதன் காரணமாக தற்போது விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டு இவ்வாறு கூறியிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா நெல் பயிருக்கு திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் வேளாண் காப்பீட்டு திட்டம் நிறுவனத்தின் மூலமே செயல்படுத்தப்படுகிறது. சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூபாய் 473 செலுத்த வேண்டுமென்றும், மேலும் நெற்பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 15 ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய பொது சேவை மையம், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி காப்பீடுகளை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஆவணங்களாக ஆதார் அட்டை நகல், கணிப்பு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் அல்லது விதைச்சான்று போன்றவையும், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்கள், பயிர் காப்பீடு செய்வதற்கான முன்பதிவு விண்ணப்பத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், காப்பீடு செய்த உடன் விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள பயிர், சாகுபடி பரப்பு வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை உடனடியாக சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்பை இதன் மூலம் சரி செய்து விடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பயிர் காப்பீட்டு தொகை செலுத்திட நெல் சாகுபடி விவசாயிகள் அனைவரும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.