மாணவ மாணவிகள் ஒரே கழிவறையை பயன்படுத்தும் அவலம்! போராட்டத்தில் இறங்கிய ஆளும்கட்சி கவுன்சிலர் 

நெல்லை பாளையங்கோட்டை மாநகராட்சி எல்லைக்குள் கீழ் உள்ள மணகாவலம் பிள்ளை நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நீண்ட காலமாக கட்டட வசதிகள் இல்லாமை, கழிவறை பயன்பாட்டில் பெரும் கோளாறு மற்றும் நிர்வாகத்தின் அலட்சியம் போன்ற அவல நிலைகள் தொடர்ந்தவாறு உள்ளதாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கழிவறை இல்லாமல் அவலம்!

8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயிலும் இந்த அரசு பள்ளியில், ஆண் மற்றும் பெண் மாணவ, மாணவிகள் ஒரே கழிவறையை பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் வேதனையுடன் கூறுகின்றனர். குறிப்பாக வயதுக்கு வந்த மாணவிகளுக்கு இது மிகவும் சங்கடம் மற்றும் சிரமமான சூழ்நிலை. எனவே, பள்ளி நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் மேல் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

நிரந்தர கட்டுமானம் இல்லை – போராட்டத்துக்கு வழக்குப்பதிவு?

பள்ளிக்கான கட்டிட பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நிர்வாக மெத்தனத்தால் நிறைவடையாமல் இருப்பது மட்டுமல்லாமல், அதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெற்றோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

திமுக கவுன்சிலர் வீதியில் – லட்டு கொடுத்து எதிர்ப்பு!

இந்தத் துயர நிலையை கண்டித்து, திமுக கவுன்சிலர் எம்.இந்திரா மற்றும் அவரது கணவர், பொதுமக்களுடன் இணைந்து வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, “லட்டு கொடுத்து” நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு பதிவு செய்தது மிகுந்த கவனம் பெற்றுள்ளது. ஆளும் கட்சி கவுன்சிலரே வீதியில் இறங்கி அரசு செயல்பாட்டை எதிர்த்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயர்ந்து விழும் நிலையில் மேற்கூரை! வைரல் வீடியோ

பள்ளியின் மேற்கூரை தொடுதோறும் பெயர்ந்து விழும் அபாயகரமான நிலையில் இருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சீரான கட்டுமானமே இல்லாத நிலையில், வார்டு 7இல் உள்ள இந்த அரசு பள்ளியின் தரம் உயர்த்த பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.