இவர்களுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை! அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட தகவல்!
திமுக கடந்த தேர்தலின் பொழுது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1௦௦௦ ரூபாய் வழங்கப்படும் என்பதும் ஒன்றாக இருந்தது. இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி இந்த திட்டம் அமல்படுத்தப்படாது என எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அவ்வப்போது கூறி வந்தார். இந்நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ரூ 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ .கீதாஜீவன் கூறுகையில்.
இந்த திட்டம் குறித்து முதல்வரின் தலைமையில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த அரசாணை வெளியாகும் போது யார் யாருக்கு எத்தனை பேருக்கு உரிமை தொகை கிடைக்கும் என்பதும் தெரியவரும் என கூறினார். ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என்று சிலர் கணக்கு எல்லாம் போட்டு பார்க்கிறார்கள்.
எப்போது ஒரு திட்டத்தை தொடங்கும் போதும் தோராயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பிறகு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே ரூ.7000 கோடியை வைத்து இவ்வளவு பேருக்கு தான் கிடைக்கும் என்று முடிவு செய்ய முடியாது எனக் கூறினார். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பெண்களும் பயனடைவார்கள். முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்க வாய்ப்பில்லை.
மேலும் பெரிய பெண் தொழிலதிபர்கள் கேட்க மாட்டார்கள், லட்ச கணக்கில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் இந்த உதவி தொகையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. எனவே தகுதியுடைய பெண்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.