நடிகர் சூர்யாவால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளையின் மூலம் தற்பொழுது வரை 5,810 முதல் தலைமுறை மாணவ மாணவியர் தங்களுடைய கல்லூரி படிப்புகளை படித்து முடித்து இருக்கிறார்கள். இப்படியாக முதல் தலைமுறை மாணவர்களின் கனவுகளை நினைவாக்க உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளையானது இவருடைய கேள்வியால்தான் உருவானது என நடிகர் சூர்யா மனம் திறந்திருக்கிறார்.
தான் படித்து முடித்துவிட்டு மில்லில் வேலை பார்த்ததாகவும் ஒரு நாள் கூட நடிகனாக மாறுவேன் என எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்த சூர்யா, நடிகராக மாறிய பின் சினிமாவில் தனக்கு கிடைத்த பணத்தை வைத்து ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்கு உதவ நினைத்ததாக அதன்படி உருவானது தான் அகரம் கட்டளை என தெரிவித்திருக்கிறார்.
அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த நடிகர் சூர்யா மேலும் பேசியிருப்பதாவது :-
2006 ஆம் ஆண்டு கஜினி திரைப்படத்தை நடித்து முடித்த பொழுது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தன் மீது கொண்ட அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கு எவ்வாறு திருப்பி கொடுக்கப் போகிறோம் என யோசித்த நான் ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தேன் என தெரிவித்திருக்கிறார். அந்த தருணத்தில் ஞானவேல் அவர்கள் கேட்ட ஒரு கேள்வியினால் தான் இன்று அகரம் அறக்கட்டளையானது உருவானது என மனம் விட்டு பேசியிருக்கிறார் நடிகர் சூர்யா.
பல ஏழை வீடுகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள் தங்களுடைய மேற்படிப்புகளை படிக்க இயலாமலும், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் அதன் பின் என்ன செய்வதென்று தெரியாமல் தினக்கூலிகளாக மாறுவதாகவும் தெரிவித்தவர், இப்படிப்பட்ட மாணவர்களுக்கு தான் எதையாவது செய்ய வேண்டும் என நினைக்கும் தருணத்தில் ஞானவேல் அவர்கள் கேட்ட கேள்வியால் இந்த அகரம் அறக்கட்டளை ஆனது பிறந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.