’என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? நாடாளுமன்றத்தில் பேசியபோது எம்பி கேட்ட கேள்வி
நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்து கொண்டிருந்த எம்பி ஒருவர் திடீரென பார்வையாளர் பக்கம் திரும்பி ஒரு பெண்ணைப் பார்த்து என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒரு சம்பவம் இத்தாலி நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது
இத்தாலி நாட்டில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, நிலநடுக்கத்திற்கு பின்னர் புனரமைப்பு பணி குறித்த விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது ஃப்ளாவியோ டி மியூரோ என்ற எம்பி தன்னுடைய தரப்பு கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பார்வையாளர் கேலரியில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டது அவையில் இருந்த அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது
இது குறித்து அவர் மேலும் கூறியபோது, ‘“நாட்டுக்கான நலன்களை செய்வதிலும் , அக்கறைக் கொள்வதிலேயே எப்போதும் கவனம் செலுத்துகிறோம். இதனால் தினமும் நமக்காக வாழ்வோரை, நம் மீது அன்பு செலுத்துவோரை , உண்மையான உறவுகளை கண்டுகொள்ளாமல் உதாசினம் செய்கிறோம். இன்று எனக்கு சிறப்பான நாள். எலிசா என்னை திருமணம் செய்து கொள்வாயா..?” என்று கையில் இருந்த காதல் மோதிரத்தை நீட்டி காதலியிடம் கேட்கிறார்.
அப்போதுதான் எம்பியும், அந்த பெண்ணும் ஏற்கனவே காதலர்கள் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. இதனை அடுத்து அருகில் உட்கார்ந்திருந்த மற்ற எம்பிக்கள் அவரை தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தினர். இருப்பினும் இதனை சபாநாயகர் கண்டித்துள்ளார். உங்களது உணர்வு எனக்கு புரிகிறது என்றாலும் நாடாளுமன்றத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்தக்கூடாது என்று அவர் மென்மையாக கண்டித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது