தியேட்டர்களில் இனி இது கட்டாயம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!
கொரோனா தடுப்பு நடவடிக்கை சினிமா தியேட்டர்களிலும் இனிமேல் கடை பிடிக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர்களிடம் அவர் கூறியதாவது, மதுரையில் இன்று தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் மகள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அருகில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் அவர்களுடன் விமானத்தில் பயணித்த, தொடர்பில் இருந்த அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். இதனையடுத்து ஆய்வின் முடிவில் இன்னும் நான்கு நாட்களில் அது எந்த மாதிரியான வைரஸ் தொற்று என்பது தெரியவரும். தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்- மகள் இருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால் இருவரும் நலமுடன் உள்ளனர்.
மேலும் தமிழக அரசு கோவிட் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி விழாக்கள், மற்றும் கொண்டாட்டங்கள் போது மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் மக்களுக்கு தாங்களே சுயக்கட்டுப்பாடு வகுக்க வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர் மற்றும் திருமண விழா, பண்டிகை விழாக்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.இதன்மூலம் நம்மை நாமே காத்துக் கொள்வது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் பரவாமல் பாதுகாத்திட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.