ஜெயலலிதாவின் திரைப்படத்திற்கு எதிராக தீபா நீதிமன்றத்தில் வழக்கு!

Photo of author

By CineDesk

ஜெயலலிதாவின் திரைப்படத்திற்கு எதிராக தீபா நீதிமன்றத்தில் வழக்கு!

CineDesk

Updated on:

ஜெயலலிதாவின் திரைப்படத்திற்கு எதிராக தீபா நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ’தலைவி’ என்ற டைட்டிலில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து 28 ஹிட் படங்களில் நடித்துள்ளது மட்டுமின்றி ஜெயலலிதாவின் அரசியல் குருவாகவும் எம்ஜிஆர் இருந்துள்ளதால் எம்ஜிஆர் கேரக்டருக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏ.எல்.விஜய் மட்டுமின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை மேலும் இரு இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். பிரபல இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸ்ஸாக இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் சீரிஸுக்கு ‘குவீன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷனும் இயக்கி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தலைவி என்ற பெயரில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தலைவி படம் எடுக்க தடை விதிக்க கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் தனது அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க கூடாது என்றும், தங்களது குடும்பத்தை பாதிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது