TN GOVERNMENT: தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதலில் பள்ளிப் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க காலை உணவு திட்டத்தையும் கொண்டு வந்துள்ளனர். அது மட்டுமின்றி, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்காக அவர்களின் சுமையை குறைக்க மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தவிர்த்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் பட்டியலின மாணவர் மாணவிகள், வேறு மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழக அரசு திட்டத்தின் கீழ் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையானது கொடுக்கப்பட்டு வருகிறது. இது தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் படிப்பு அதாவது கல்லூரி முடிக்கும் வரை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கல்லூரியில் பயிலுபவர்களுக்கு 7500 முதல் 8000 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ஆம் தேதி தான் கடைசி என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர் மற்றும் மாணவிகள் வரும் 30ம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண், கல்வி சான்று, சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை வைத்து umis.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். முன்னதாகவே விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் தரவுகளில் ஏதேனும் பிழை இருப்பின் அதனையும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.