பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு!
அதிமுகவில் ஒருவழியாக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் தனது ஆதரவாளர்களுடன் மாநாடு நடத்த திட்டம் வகுத்துள்ளார் ஓபிஎஸ். இந்த மாநாடு குறித்து பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் அவர் தனக்கு தான் அதிமுகவில் ஆதரவு உள்ளது என்பதை நிருபிக்க போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி உள்ளனர்.
பன்னீர்செல்வம் நடத்தும் மாநாடு குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளரிடம் கூறும் போது, அவர்கள் வரும் இருபத்தி நான்காம் தேதி மாநாடு வைத்துள்ளார்கள் அதற்கு யாரை வேண்டுமானாலும் அழைத்து கொள்ளட்டும் எங்களை விட்டது சனியன் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவரிடம் உள்ள கருப்பு பணம் இந்த மாநாடு மூலம் வெளிவரும், அதை 200, 300 என மக்களுக்கு பிரித்து கொடுப்பார்கள் என கூறினார்.
மேலும் கூறிய அவர் ஆளுநர் என்பவர் அரசியல் அமைப்பு சட்டத்தில் என்ன கூறி இருக்கிறதோ அதன்படிதான் செயல்படுவார், திமுகவை பொறுத்தவரை என்ன சொன்னாலும் சரி என்று சொல்ல வேண்டும் அப்படி சொன்னால் வாழ்க என்று சொல்லுவார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது தனது சட்டையை கிழித்து கொண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு போனதை மறந்து விட்டார்களா.
சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கு பேச்சுரிமை என்பது போய்விட்டது, எதிர்க்கட்சி துணைத் தலைவராக நீடிப்பதற்கு ஓபிஎஸ்க்கு என்ன தகுதி உள்ளது என பலமுறை சபாநாயகரிடம் எடுத்து கூறியும் அவர் கேட்பதாக இல்லை, சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசுவதைவிட அவர் தான் அதிகம் பேசுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.