பதவி எனக்கு கர்ச்சீப்!.. ஒருத்தர்கிட்டயும் போய் நிற்கமாட்டேன்!.. கூட்டணிக்கு எதிர்ப்பு காட்டும் ஜெயக்குமார்?!

Photo of author

By அசோக்

பதவி எனக்கு கர்ச்சீப்!.. ஒருத்தர்கிட்டயும் போய் நிற்கமாட்டேன்!.. கூட்டணிக்கு எதிர்ப்பு காட்டும் ஜெயக்குமார்?!

அசோக்

jayakumar

போன அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தினமும் காலை செய்தியாளர்களை சந்தித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குரலாக அதிமுகவின் நிலைப்பாட்டு பேசி வந்தவர். குறிப்பாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு இவர்தான் பதில் சொல்லி வந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தோல்வியை சந்தித்தது. வழக்கமாக வட சென்னை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறும் ஜெயக்குமாரும் தோல்வி அடைந்தார். அதன்பின் சில மாதங்களில் அதிமுக தலைவர்கள் பற்றி அண்ணாமலை அவதூறாக பேச கோபமடைந்த பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் ‘பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றுப்போனோம். ராயபுரம் தொகுதியில் நான் தோற்றதே இல்லை. அந்த தொகுதியில் முடி சூடா மன்னனாக இருந்தேன். ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அந்த தொகுதியில் வசிக்கும் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை’ என ஓப்பனாக பேசினார்.

இப்போது அதே அதிமுகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா அதிகாரப்பூர்வமாகவே இதை அறிவித்துவிட்டார். ஆனால், இதுவரை ஜெயக்குமார் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒருபக்கம் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயக்குமார் அதிமுகவிலிருந்து விலகியதாக செய்திகள் பரவியது.

jayakumar
jayakumar

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் ‘நான் அதிமுகவிலிருந்து விலகிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். என் குடும்பமே திராவிட வரலாறு கொண்டது. தன்மானத்துடன் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நான் நின்றது இல்லை. எனக்கு அடையாளத்தை கொடுத்தது அதிமுகதான். எனவே, சாகும் வரை அந்த கட்சியில் இருப்பேன். பதவி தோளில் போடும் துண்டு என்றார் அண்ணா. ஆனால், எனக்கு அது கர்ச்சீப்’ என சொல்லி இருக்கிறார். அதோடு, எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அவர் எங்கேயும் சொல்லவில்லை.

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் போய் நின்றதில்லை என சொல்லியிருப்பதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என பேச துவங்கிவிட்டார்கள்.