ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! காரணம் இதுதான்!!

Photo of author

By Parthipan K

ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! காரணம் இதுதான்!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் சில வாக்குப்பதிவு மையங்களில் கள்ள ஓட்டு போடப்படுவதாக புகார் எழுந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அந்த வகையில், ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 49-வது வார்டில் பழைய வண்ணாரப்பேட்டையில், அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்தில் கள்ள ஓட்டு போடப்படுவதாக தகவல் வந்ததையடுத்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரின் ஆதரவாளர்களுடன் அந்த மையத்துக்கு சென்றார்.

ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர். அ.தி.மு.க-வினர் தாக்கியதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அவரின் ஆதரவாளர்கள் 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து மார்ச் 7ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இதை  விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பில் ஷெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல், ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஜாமின் மனுவின் நகலை போலீஸ் தரப்புக்கு வழங்க ஜெயக்குமார் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நரேஷ் தரப்பில் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.