பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோம்! தாலிபன்களை எச்சரித்த பைடன்!

Photo of author

By Mithra

ஆப்கானிஸ்தானில் உச்சகட்டத்தை எட்டியுள்ள போரால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளன. இதற்கு காரணம், நாட்டை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த தாலிபன் அமைப்பு, கடந்த ஒரு மாதமாக அதிரடித் தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தானை கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டது.

கடந்த வாரத்தில் 13 மாகாணங்களை கைப்பற்றிய தாலிபன்கள், நேற்று மசூர் இ ஷெரிஃப் என்ற மிகப்பெரிய நகரையும் கைப்பற்றியுள்ளனர். அதே நேரத்தில், தலைநகர் காபுலை நோக்கி நகர்ந்து வரும் தாலிபன்கள், காபுலில் இருந்து 10 கிலோ மீட்டர் அருகில் வந்துள்ளனர்.

அடுத்து அவர்கள் காபுல் நகருக்குள் நுழைந்து விட்டால், மிகப்பெரிய தாக்குதல் நடைபெறும் என உலக நாடுகள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே காபுலில் உள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள், தங்கள் நாட்டினரை தாயகம் அழைத்துச் செல்ல அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் படைகளை குவித்துள்ளன.

அமெரிக்கா 3000 படை வீரர்களை காபுலுக்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 2000 படைவீரர்கள் அனுப்பப்படுவதாக அதிபர் பைடன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், தாலிபன்களுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் காபுல் நோக்கி வருவதை தடுக்க வான்வழித் தாக்குதலை நடத்தவேண்டும் என அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். அதை உறுதி செய்யும் வகையில், தாலிபன்களின் தாக்குதல்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என பைடன் நேரடியாக எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில், காபுல் நகரை முற்றிலுமாக தனிமைப்படுத்தியுள்ள தாலிபன்கள், எப்போது வேண்டுமானாலும் அதிரடி தாக்குதலை நடத்தலாம் என்பதால், தங்கள் நாட்டினரையும், படை வீரர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதனால், கண்டிப்பாக வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும் என்றே தெரிகிறது.