திமுகவிற்கு எதிராக திரும்பிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன்

0
333

திமுகவிற்கு எதிராக திரும்பிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன்

பாமகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும்,வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தினரை சுற்றி விதவிதமான அரசியல் நகர்வுகள் நடந்து வருகிறது.இதில் இறுதி கட்டமாக வாழ்நாள் முழுவதும் காடுவெட்டி குரு யாரை எதிர்த்தாரோ அவர்களுடனே இணைந்து செயல்படுவதாக அவருடைய மகன் கணலரசன் தெரிவித்திருந்தார். இதற்காக திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்தார்.

அதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் அவர்களும் காடுவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள குருவின் இல்லத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில் தீடீர் திருப்பமாக திமுகவிற்கு எதிராக குருவின் மகன் கணலரசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

வன்னியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதாக சொன்ன திமுகவே வழக்கு போட்டு தடுக்க பார்ப்பதா.! மாவீரன் மஞ்சள் படை தலைவர் குரு.கணலரசன் கடும் கண்டனம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுக இளைஞரணி தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் மாவீரன் காடுவெட்டியார் அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலையும், தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னிய சமூகத்திற்கு உள் இட ஒதுக்கீடும் கேட்டு கோரியிருந்தோம். அதனடிப்படையிலேயே அவர்களுக்கு ஆதரவும் வழங்கினோம். இதற்கிடையில் தமிழக அரசு நியாயப்படி வழங்க வேண்டிய 15 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை வழங்காவிட்டாலும் 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதை எங்கள் மாவீரன் மஞ்சள் படை உள்ளிட்ட அனைத்து வன்னியர் அமைப்புகளும், இரண்டரை கோடி வன்னிய மக்களும் 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் வேலையில், திமுக திடிரென வன்னியர் விரோத போக்கை கையிலெடுத்து வழக்கு தொடர்ந்திருப்பதாக வரும் செய்திகளை கேட்டு மாவீரன் மஞ்சள் படையும், தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னிய பேரினமும் கொந்தளித்து வருகிறது. ஆகவே மேற்கண்ட திமுகவின் வன்னிய விரோத நடவடிக்கையால், மாவீரன் மஞ்சள் படை திமுகவிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதுடன் திமுகவின் வன்னிய விரோத செயல்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Previous articleதேமுதிக எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
Next articleதேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்ற தினகரன் போட்ட மெகா பிளான்