கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் புதியதாக 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களை நியமிக்க கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். கட்சி கட்டமைப்பு, பிரசார வியூகம் போன்ற விஷயங்களில் அவரது ஆலோசனைப்படி தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கமலஹாசன் வருகிற 7 ஆம் தேதி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடயிருக்கிறார். வழக்கமாக தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமலஹாசன் இந்த முறை மிகப்பெரிய விழாவுக்கு திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் 7, 8, 9 என மூன்று நாட்கள் தொடர்ந்து கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பிறந்தநாள் அன்று 7 ஆம் தேதி காலை நடிகர் கமலின் தந்தைக்கு சொந்த ஊரான பரமக்குடியில் சிலை திறக்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
இதனையடுத்து பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர்திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட உள்ளது. 8 ஆம் தேதி சென்னையில் தனியார் திரையரங்கில் காந்தியின் 150-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஹே ராம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.

இந்த கலந்துரையாடலில் கமலஹாசனும் பங்கேற்கிறார். இவருடன் ஹே ராம் படக்குழுவினரும் கலந்து கொள்வார்கள். அன்றைய தினமே கமலின் அலுவலகத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு சிலை திறக்கப்படுகிறது.
அடுத்த நாள் 9 ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் உங்கள் நான் என்ற பிரபலமான கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட தமிழ், இந்தி, தெலுங்கு திரை பிரபலங்களும் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் கமலஹாசன் பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டு இருந்தாலும் மறுபுறம் கட்சி கட்டமைப்பில் மேற்கொண்டு வரும் மாற்றங்களும் வேகம் எடுத்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சிக்கு புதிய பொதுசெயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் போது கமல்ஹாசனுக்கு நெருக்கமான கவிஞர் சினேகன், கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அதில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். தற்போது அவருக்கு கமல்ஹாசன் புதிய பதவி ஒன்றையும் அளித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிதாக விரிவாக்கம் செய்திருக்கும் கட்டமைப்பில், கட்சியின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்கும் திட்டத்தின்படி ஏற்கனவே சில பொறுப்புகளுக்கான நியமனங்களை அறிவித்துள்ளேன். அதை தொடர்ந்து, மேலும் கீழ்கண்ட சில பொறுப்புகளுக்கான நியமனங்களை இப்போது அறிவிக்கிறேன்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வரும் 2021-ல் தமிழகத்தின் அரசியலை மாற்றியமைக்கும் லட்சியத்தை வலுப்படுத்த கட்சி தொண்டர்களும், என் அன்பிற்குரிய நற்பணி இயக்கத்தினரும் தற்போது நியமிக்கப்படும் பொறுப்பாளர்களோடு இணைந்து செயல்பட்டு, மக்களுக்கான நல்லாட்சி கனவை நிறைவேற்றிட உழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கும், விண்ணப்பங்களில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தொடர்ந்து அறிவிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு மாநில செயலாளர் சார்பு அணி என்ற அணியை அறிவித்து அதில் கவிஞர் சினேகனுக்கு இளைஞரணி பொறுப்பை கமல்ஹாசன் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:
பிறந்தநாள் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் கமலுக்கு சில கட்சி பணிகள் இருக்கின்றன. புதிய பொறுப்பு நியமனங்கள் தொடர்ந்து நடைபெறும். அவற்றையும் முடித்த பின்னர் ஜனவரி, பிப்ரவரியில் தான் தேர்தல் பிரசாரம், சுற்றுப்பயணம் போன்றவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
கட்சி கட்டமைப்பில் நடக்கும் மாற்றங்கள் என்பது பணிகளை அனைவருக்கும் பிரித்து சமமாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் நடைபெறுகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான பொறுப்புகள் அறிவிக்கப்பட இருக்கிறது. டிசம்பர் இறுதிக்குள் அனைத்து பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டு விடும்.
மேலும் இதில் கிராமப்புற இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். கல்லூரி மாணவர்கள் கூட நிறுத்தப்படலாம். கட்சி கட்டமைப்பில் உருவாக்கப்படும் மாற்றங்கள் அடுத்து கமலஹாசன் முதலமைச்சர் ஆவதற்கான அடித்தளமாக அமையும் என்றும் அவர்கள் கூறினர்.