சட்டசபை தேர்தலுக்காக கமலஹாசன் எடுக்கும் புதிய வியூகம்

0
174
Kamal Haasan Strategy for Assembly Election-News4 Tamil Latest Online Tamil News Today
Kamal Haasan Strategy for Assembly Election-News4 Tamil Latest Online Tamil News Today

சட்டசபை தேர்தலுக்காக கமலஹாசன் எடுக்கும் புதிய வியூகம்

சென்னை: தமிழக அரசியலில் தானும் தடம் பதிக்க விரும்பிய நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளில் நடிகர் ரஜினி காந்த் பங்கேற்பார் என்று பேசப்படுகிறது. இதையடுத்து அவரது அரசியல் சார்ந்த நகர்வுகள் மேலும் வேகம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர்களும் அதிமுக மற்றும் திமுகவின் மூத்த தலைவர்களுமாக விளங்கிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதாக கருதிய நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், முதன்முறையாக அவரது கட்சி போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை பெற்றது.

இவரது கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அள விற்கு வாக்குகள் கிடைத்தன. 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. 11 தொகுதிகளில் 3வது இடம் பெற்றது. இது கமல்ஹாசனுக்கும் அவரது கட்சியினருக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

இதனையடுத்து அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி நடிகர் கமலஹாசன் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் ஆதரவு இல்லை என்பதை பலரும் அறிவர். இதனால் கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலை ‘குறி’ வைக்கும் கமல் - பிறந்தநாள் விழாவில் ரஜினி பங்கேற்பு?

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அவர்களை முடிவு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து வரும் 7 ஆம் தேதி கமல் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல், இந்த முறை பெரிய விழாவுக்கு திட்டமிட்டுள்ளார்.இது அவருடைய அடுத்த அரசியல் நகர்விற்கு ஆரம்பமாக அமையும் என்றும் பலரும் பேசி கொள்கிறார்கள்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது:-

கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகன் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மேடைகளில் நிறையவே பேசியிருக்கிறார் கமல். தந்தையே தனது கலையுலகுக்கு ரோல் மாடலாக இருந்தார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன் பிறந்த அதே நவம்பர் 7 ஆம் தேதி தான் அவரின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகனின் நினைவு நாளும். எனவே கமல் தனது பிறந்த நாளை கொண்டாடுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்.

இந்த பிறந்த நாளை தன் தந்தையை நினைவு கூரும் விதமாக பெரிய விழாவுக்குத் திட்டமிட்டுள்ளார். 1959-ல் ஐந்து வயது சிறுவனாக திரையுலகில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமானவர் கமல். அதனால் திரை உலகில் அவருக்கு இது 60-வது வருடம்.

இது எல்லாவற்றையும் சேர்த்து சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் நினைவாக அவரது சிலை திறக்கப்பட இருக்கிறது. அந்த சிலை அவரது சொந்த ஊரான பரமக்குடியில் நிறுவப்பட உள்ளது. பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர்திறன் மேம்பாட்டு மையம் ஒன்றும் தொடங்கப்பட இருக்கிறது.

ரஜினிகாந்த்

சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தமிழக, இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்-அமைச்சர் பிரனாயி விஜயன், மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் ரஜினி காந்தும் கலந்து கொள்வதால் இந்த விழாவில் நிச்சயம் அரசியல் பேசப்படும். இதன் மூலம் அகில இந்திய அளவில் மூன்றாவதாக ஒரு அணியை அமைக்கும் முயற்சியை கமல் முன்னெடுக்கிறார் என்று கூறலாம்.

கமல்ஹாசன் கடந்த தேர்தலிலேயே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். காங்கிரஸ் கட்சியோ கமல் தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. எனவே அந்த முயற்சியை கைவிட்டு தமிழ் சிறிய கட்சிகளை இணைத்து கூட்டணியாக்கவும் முயற்சி செய்தார். அதுவும் நிறைவேறவில்லை.

இதனையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பலமான கூட்டணி அமைக்க திட்டமிடுகிறார். பிரசாந்த் கிஷோர் தனது ஆலோசனையில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான அரசியல் தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வர யோசனை கூறினார். ஆனால் ஊழல் கறை படிந்தவர்களை கட்சிக்குள் இணைக்க மாட்டேன் என்பதில் கமல் பிடிவாதமாக இருக்கிறார்.

எனவே அகில இந்திய அளவில் உள்ள கட்சிகளை இணைத்து தனது தலைமையில் தேர்தலை சந்திக்க தயார் ஆகிறார். இந்த பிறந்த நாளில் அதற்கான பிரசாரத்தையும் பயணத்தையும் தொடங்க இருக்கிறார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Previous articleகாத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி
Next articleஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்