இந்தியா சுதந்திர நாடு இல்லையா? இந்தி திணிப்பிற்கு எதிராக கமலஹாசனின் விமர்சனம்
எந்த மொழியையும் திணிக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான்” என்று பலமுறை பளிச்சென சொன்ன கமலஹாசன், இன்னமும் இந்த இந்தி திணிப்பு குறித்து கருத்து சொல்லவிலையே… ஏன்.. என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழுந்தது. அந்த கேள்விக்கான பதிலாக தான் அவர் ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில்,”இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுடன் ஒரு வீடியோவையும் போட்டுள்ளார் கமல். அதில் அவர் தோன்றி கூறியதாவது:
“பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக் கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுத்தரவே முடியாது என்று பல மாநில மக்கள் சொன்ன விஷயம், எங்கள் மொழியும் கலாச்சாரமும். 1950-ல் இந்தியா குடியரசானபோது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை எந்த “ஷா”வோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்ககூடாது.
ஜல்லிக்கட்டு போராட்டம்.. ஒருசிறிய போராட்டம். ஒரு சிறிய வெற்றி.. எங்கள் மொழிக்காக நாங்கள் போராட துவங்கினால், அது அதைவிட பன்மடங்காக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கோ தமிழ்நாட்டுக்கோ தேவையற்றது.
பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை. வங்காளிகளை தவிர. இருப்பினும், நாங்கள் அதை சந்தோஷமாக பாடிக் கொண்டிருக்கிறோம். பாடிக் கொண்டிருப்போம். ஏனெனில் அதை எழுதிய கவிஞர், எல்லா கலாச்சாரத்திற்கும், எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.
இந்தியா இப்போதைக்கு சுதந்திர நாடாக இல்லை என்பதை அவருடைய இந்த ட்வீட் மூலம் கமல் மறைமுகமாக சொல்லி உள்ளார். அது மட்டுமில்லாமல்.. “வெற்று நாயகம்” என்ற வார்த்தையை கூறியதன் மூலமும், எந்த “ஷா”வும் அதை மாற்றிவிட முடியாது என்றும் மத்திய அரசிற்கு சம்மட்டி அடி பதில் கொடுத்துள்ளார் கமலஹாசன்!
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.