தியேட்டர்களில் மிரட்டிய கமலின் விக்ரம்… இப்போது ஓடிடியில் படைத்துள்ள புதிய சாதனை!

0
136

தியேட்டர்களில் மிரட்டிய கமலின் விக்ரம்… இப்போது ஓடிடியில் படைத்துள்ள புதிய சாதனை!

விக்ரம் திரைப்படம் கடந்த வாரம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆனது.

ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

தமிழில் மட்டும் இல்லாமல் மற்ற தென்னிந்திய மாநிலங்கள் (பாலிவுட் தவிர்த்து) மற்றும் இந்தியாவுக்கு வெளியேயும் விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரிலீஸுக்கு பின்னர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளராக மட்டும் சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் தயாரிப்பாளருக்கு இந்த அளவுக்கு லாபம் கொடுத்த தமிழ்ப் படம் எதுவும் இல்லை என கோலிவுட் வட்டாரமே ஆச்சர்யத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விக்ரம் திரைப்படம் 5 மொழிகளில் ஸ்ட்ரீம் ஆனது. இந்நிலையில் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பைப் போலவே ஓடிடியிலும் பெரியளவில் வரவேற்பு இந்த படத்துக்குக் கிடைத்து வருகிறது. ஸ்ட்ரீம் ஆகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் டிஸ்னியில் இதுவரை வெளியான படங்களில் முதல் வாரத்தில் அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்ட திரைப்படமாக விக்ரம் சாதனை படைத்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

Previous articleசந்தானம் நடிக்கும் புதிய படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்… வெளியான தகவல்!
Next articleஇந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !!