கமலஹாசன் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்! விஸ்வரூபம் எடுக்குமா மக்கள் நீதி மய்யம்?

Photo of author

By Parthipan K

கமலஹாசன் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்! விஸ்வரூபம் எடுக்குமா மக்கள் நீதி மய்யம்?

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் மத்தியில் பாஜக தலைமையிலான அரசும் தமிழகத்தில் அதிமுக அரசும் தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொண்டன. தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க தொகுதிகளை பெற்று அதிமுக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று காத்திருந்த திமுகவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

இனியும் ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமில்லை என்பதால் அடுத்த நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதே போல தற்போதைய நிலையில் அதிமுக ஆட்சியை தக்கவைத்து கொண்டாலும் அடுத்து வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளானது திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு அச்சம் தரும் வகையிலான தீர்ப்பை தான் வழங்கியுள்ளது. அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத சீமான் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். குறிப்பாக கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த இந்த ஆதரவு தமிழக அரசியல்வாதிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் இணைந்து செயல்பட தேர்தல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் என்பவருடனான ஒப்பந்தத்தை கமலஹாசன் உறுதி செய்துள்ளதாக கூறுகின்றனர். கமல்ஹாசனின் இந்த வியூகம் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் :

கடந்த கால தமிழக அரசியலில் நடிகர்கள் முதல்வர்கள் ஆவதும் மக்களின் விருப்பமான தலைவர்கள் ஆவதும் தமிழ்நாடு கண்ட உண்மை. இதற்கு உதாரணம் அரசியலில் வெற்றி பெற்றவர்களான கருணாநிதி,எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மேலும் வெற்றி பெற துடிக்கும் விஜயகாந்த்,சீமான் மற்றும் தற்போது நுழைந்துள்ள கமலஹாசன் போன்றோரையும் கூறலாம். இதுமட்டுமில்லாமல் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தும் அரசியலில் ஜொலிக்க முடியாமல் போன திரைநட்சத்திரங்களும் உண்டு. எம்ஜிஆர் சிவாஜிக்கு அடுத்து உச்ச நடிகர்கள் வரிசையில் இருக்கும் கமலும் ரஜினியும் அரசியல் வானில் பவனி வரத் தயாரானார்கள்.

பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று ரஜினி இன்னும் முழங்கிக் கொண்டே இருக்க தற்போது கமல் மக்கள் நீதி மய்யத்துடன் வந்தே விட்டார். நடந்து முடிந்த மக்களாட்சித் தேர்தலில் தனித்து நின்று வெள்ளோட்டம் பார்த்து முடிவுகள் சாதகமாக உள்ள நிலையில் அடுத்து  உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து நிற்க வியூகம் வகுத்து வருகிறார் கமலஹாசன். அதற்காக பிகே என்ற பிரஷாந்த் கிஷோர் என்ற பிரபலமான அரசியல் ஆலோசகருடன் பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த பிரகாஷ் கிஷோ(ஜோ)ர் :

பொது மக்களின் மத்தியில் வெகுவாய் அறியப் படாத பெயர் அரசியல்வாதிகள் அனைவரும் அப்பாயின்மென்ட்டிற்காய் காத்திருக்கும் ஒரு பெயர் பிகே என்ற பிரஷாந்த் கிஷோர். 2014 ல் குஜராத்தில் மோடியின் பாதையை மாற்றி தான் வகுத்த திட்டப்படி ராஜபாட்டையில் பவனி வர வைத்த சிறப்புத் தேர்தல் வித்தகர் தான் இந்த பிரஷாந்த் கிஷோர்.

இதனையடுத்து தற்போது நடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில்  ஜெகன்மோகன் ரெட்டி மொத்தமாய் வெற்றி வாகை சூடவும் இந்த பிகேவின் லாஜிக்கே காரணம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். தேர்தலில் வெற்றி பெற ஒரு சில கணக்குகள் போதும் என்பது இந்த பிரகாஷின் கருத்து . அவர் கூறிய அந்த கருத்து குஜராத்திலும் ஆந்திராவிலும் வெற்றியை கொடுத்து நிரூபித்துள்ளது.மேலும் பீகாரில் நிதீஷ்குமாருக்கான வெற்றிப் பாதையும் இவர் வகுத்ததே .

திமுகவின் சபரீசனும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும் 2021 தேர்தல் வெற்றிக்காக பிரகாஷ் கிஷோரை சந்திக்க வருடக் கணக்காக காத்திருக்க ஒரே மணி நேர சந்திப்பில் ஆழ்வார் பேட்டையில் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் தயாரானது கமல் – பிகே இடையேயான ஒப்பந்தம் . இதன் பின்னே இருப்பது கமலின் நண்பர் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என்கிறது அரசியல் வட்டாரம் .

மக்களவைத் தேர்தலில் மய்யம் :

பிஜேபியின் B அணி, திமுகவுடன் இணையப் போகிறது என்று பல்வேறு பரப்புரைகள் இருந்தாலும் மக்களவைத் தேர்தலில் தனித்துக் களம் கண்டார் கமல் . கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்தில் தனித்து நிற்பது முட்டாள்தனம் என அரசியல் ஆரூடம் சொல்ல மக்களின் நாடி பிடித்துப் பார்க்க தனித்து நின்றார் கமல். அனைவருக்கும் தெரிந்த திரைமுகம் என்பது மக்களிடையே செல்ல எளிதாய் கை கொடுத்தது.

மேலும் அவர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சற்று அருகழைத்துப் போனது.திராவிடக் கட்சிகளின் மாற்றாய் அதற்குள் வர வாய்ப்பிலையெனினும் இருக்கும் இடமறிய உதவியது மக்களவைத் தேர்தல்.பிரகாஷின் திறமை பற்றி அறிந்த கமல் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தை ஒருமணி நேர சந்திப்பில் முடிவு செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் மூன்றாம் இடம்பிடிக்கும் என்று நம்பப்பட்ட நாம் தமிழர்கட்சியை எளிதாய் நான்காம் இடம் தள்ளி அந்த மூன்றாம் இடத்தை மக்கள் நீதி மய்யம் பிடித்தது. இந்த தேர்தலில் 8-10 சதவிகித திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கி பிரிக்கப்பட்டது. விழுந்தது அத்தனையும் முதல் முறை வாக்களிப்போரின் ஓட்டு என்ற நிலை இன்னும் அவர்களின் நம்பிக்கையை வளர்த்தது.

அடுத்ததாக கமல் கவனிக்க வேண்டியவை:

நகர பகுதிகளில் கிடைத்தது போல கிராமப்பகுதிகளில் முந்தைய தலைமுறை இடங்களில் மய்யத்திற்கு சொல்லிக் கொள்ளும்படி வாக்குகள் கிடைக்கவில்லை.வெறும் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. மேலும் கமலஹாசன் அளித்த வாக்குறுதிகளை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைய செய்ய வேண்டும்.

படிக்க மிக எளிதான நேர்மையான இலவசங்களற்ற நேரடி வாக்குறுதிகள். இவற்றையெல்லாம் சாதிப்பதென்பது எளிதா ? என்பதற்கான விளக்கத்தை கட்சியின் தலைவராய் கடைக்கோடித் தமிழன் வரையில் கொண்டு செல்ல வேண்டும் .

பல நேரங்களில் கமலஹாசன் பேசுவது புரியாது என்பது பலரும் அறிந்தது என்ற நிலையில் மக்களுக்குப் புரியும் எளிதான மொழி உரையாடல் இன்னும் வேகமாய் அவரது கருத்துக்களை கொண்டு செல்லும். எப்படிப் பேசினாலும் புரியவில்லை எனச் சொல்லும் கூட்டமும் உண்டு.கட்சி நிர்வாகிகளும் மக்களிடையே நன்கு அறியப்பட வேண்டும்.

மக்களுடன் இணைந்தே பணியாற்ற வேண்டும்.எடுத்து வைக்கும் காலடிகள் அளந்து வைக்கப் பட்டால் வெற்றி சாத்தியமே. ஆட்சிக் கட்டிலில் அமர பல வருடம் ஆனாலும் மக்களிடையே பலம் மிக்க ஒரு மாற்று வழியாய் எளிதில் உயரலாம் .

முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி  அவர்களின் இழப்பும் தமிழக அரசியலில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. சரியான இருவர் இணைந்த இந்த வியூகம் வெற்றியை கொடுக்குமா? என்பதை அறிய காத்திருப்போம் அடுத்த தேர்தல் வரை.