வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!!

0
173
400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!
400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!!

மத்திய அரசு ஹிந்தியை முதல் மொழியாக மாற்றுவதில் அதிக பங்காற்றி வருகிறது. அந்த வகையில் கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை ஹிந்தியை எந்த வகைகளில் எல்லாம் மக்களிடம் திணிக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பாடுகளை நடத்துகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், தற்பொழுது வானொலிகள் மூலமாக ஹிந்தியை திணிக்க முற்படுவது நியாயமற்றது, என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,

காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.52 முதல் இரவு 11.20 மணி வரை 17.28 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் எந்த முன்னறிவிப்புமின்றி, நேற்று (அக்டோபர் 2) முதல் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. காலையில் 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையிலும், இரவில் 9 மணி முதல் 10 மணி வரையிலும் மும்பை விவிதபாரதி நிலையத்தின் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

காரைக்கால் வானொலியில் தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக வானொலி நிலைய அதிகாரிகள் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மொழி, கலாச்சாரம், தொழில் முறை ஆகியவற்றில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே மாதிரியான வானொலி நிகழ்ச்சிகளை கொண்டு வருவதே வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தத்துவத்திற்கு எதிரான செயல் ஆகும்.

அதுமட்டுமின்றி, இந்தி நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பு என்பதைக் கடந்து இந்தியை திணிப்பது தான். இந்த முயற்சி இப்போது தொடங்கப்பட்டது அல்ல. 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விட்டது. அனைத்து மண்டல வானொலிகளில் ஒலிபரப்பாகும் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று அனைத்திந்திய வானொலியின் தலைமை இயக்குனர் கடந்த 06.08.2014 அன்று அனைத்து மண்டல வானொலி நிலையங்களுக்கும் அனுப்பிய கோப்பு எண் 13/20/2014/125 என்ற அந்த சுற்றறிக்கையில் கூறியிருந்தார்.

அதன்படி சென்னை வானொலி நிலையத்தின் கூடுதல் தலைமை இயக்குனர், 20.10.2014 அன்று தருமபுரி, நாகர்கோவில் ஆகிய உள்ளூர் வானொலி நிலையங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்கால் வானொலி நிலையத்திற்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 7 மணி நேரம் சென்னை மண்டல வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

சென்னை வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இவற்றை தருமபுரி, நாகர்கோவில், காரைக்கால் ஆகியவற்றுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பது தான் அப்போது அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் நோக்கம் ஆகும். ஆனால், அதை எதிர்த்து கடந்த 24.10.2014 அன்று நான் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அம்முயற்சி கைவிடப்பட்டது.

அப்போது திட்டமிடப்பட்டவாறே தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை காரைக்கால் வானொலி ஒலிபரப்பத் தொடங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக தமிழ்நாட்டில் தருமபுரி, நாகர்கோவில் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 86 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் இத்தகைய 4 மணி நேர இந்தி நிகழ்ச்சிகள் திணிக்கப்படக் கூடும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தருமபுரி, நாகர்கோவில், காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ளூர் வானொலிகள் தொடங்கப்பட்டதன் நோக்கமே அப்பகுதிகளில் உள்ள உழவர்களுக்கு வேளாண்மை குறித்த தகவல்களை தெரிவிக்கவும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மீன்வளம், வானிலை முன்னறிவிப்பு போன்றவற்றை தெரிவிப்பதற்காகத் தான். காரைக்கால் வானொலி நிலையம் தொடங்கப்பட்ட போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, புதுவையில் பேசப்படும் மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட வேண்டும். இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை திணிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் மத்திய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை வழங்குவது தான் பிரசார்பாரதியின் கடமை ஆகும். அதற்கு மாறாக விருப்பமற்ற நிகழ்ச்சிகளையும், மொழிகளையும் திணிக்கும் போது அது வெறுப்பை ஏற்படுத்தும்.

இதை உணர்ந்து கொண்டு காரைக்கால் வானொலியில் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டு, வழக்கம் போல தமிழ் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்ப வேண்டும். தருமபுரி, நாகர்கோவில் போன்ற மற்ற நிலையங்களுக்கு இந்தி நிகழ்ச்சிகளை நீட்டிப்பதையும் பிரசார் பாரதி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் வானொலி நிலையம் முன், அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பாமக நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Previous articleதனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!
Next article6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!