மத்திய அரசு அனுமதியில்லாமல் புராதன நினைவுச் சின்னங்களில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை கனிமொழி எம்பி குற்றசாட்டு
தொல்லியல் துறை சார்பாக தேசியவாத காங்கிரசின் தலைவரான சரத்பவாரின் மகளும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தொல்லியல் துறை அமைச்சரான பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்த பதில் திருப்தியில்லாததால், அதனை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது திமுக மக்களவை குழு துணைத் தலைவரான கனிமொழி கூறியதாவது: சுப்ரியா சுலே அவர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய தொல்லியல் துறை அமைச்சர் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கட்டிடங்கள் கட்டுவதற்காக நிதி ஒதுக்க மாநில அரசுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது ‘ என கூறினார். ஆனால், மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியில்லாமல் புராதன நினைவுச் சின்னங்களில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை.
மேலும் தமிழகத்தில் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்கள் நிறைய இருக்கின்றன. அந்தப் பகுதிகளில் எவ்வித கட்டுமானப் பணிகளுக்கும் மாநில அரசு அனுமதி அளிக்க முடியாத நிலையே இருக்கிறது. இதற்காக தொல்பொருள்துறை தடைகளை ஏற்படுத்தியிருக்கிறதா? இதுகுறித்து அமைச்சர் தெளிவுபடுத்திட வேண்டுகிறேன் என்றும் கனிமொழி கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில் திமுக மக்களவை குழு துணைத் தலைவரான கனிமொழி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய தொல்லியல் துறை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல், “மத்திய தொல்பொருள் துறை பற்றி தமிழ்நாட்டில் சில தவறான கருத்துகள் நிலவுகின்றன. மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதன் விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. அந்த விதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் வேறு பணிகளை செய்ய மாநில அரசுகளின் துறைகளுக்கு நாங்கள் பல முறை அனுமதிக்கவில்லை. அதேசமயம், மாநிலங்களின் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டிய தேவை இருந்தால், அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
இதில் எந்த சிக்கலும் இருக்காது. நாட்டிற்குள் மட்டுமல்ல, வெளியில் கூட விதிமுறைகளின்படி தான் மத்திய தொல்பொருள்துறை செயல்படுகிறது. மாநில அரசுகளுக்கு இதுகுறித்து ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரலாம். தொல்பொருள்துறை எந்த தடையையும் ஏற்படுத்தாது என உறுதியளிக்கிறேன் என்றும் மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல் விளக்கமளித்திருக்கிறார்.