ரசிகரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது!!

Photo of author

By Janani

ரசிகரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது!!

கன்னட திரை உலகில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷன். இவர் நடித்து சமீபத்தில் வெளியான “காடீரா” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் தர்ஷன் ஒரு கொலை வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாக்கடை கால்வாயில் கடந்த 9ம் தேதி ஆண் பிணம் ஒன்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கொலை பற்றி விசாரண நடத்திய போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை
கைப்பற்றி சந்தேகத்தின் பெயரில் 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விசாரணையில் கண்டறியப்பட்ட நபர் ரேணுகா சாமி என்பதும் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இவரை 11 நபர்கள் சித்ர துர்காவிலிருந்து கடத்தி வந்து பெங்களூரில் வைத்து கொலை செய்து கால்வாயில் வீசி உள்ளனர். அதனை தொடர்ந்து இதன் காரணம் குறித்து 11 பேரையும் விசாரித்த போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியான சம்பவம் தெரிய வந்துள்ளது. அதாவது கன்னட நடிகர் தர்ஷன் கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில் நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கௌடா இவரும் கன்னட பட நடிகை ஆவார். நடிகர் தர்ஷன் விஜயலட்சுமியை  திருமணம் செய்து இருந்த நிலையிலும் அடிக்கடி பவித்ராவுடன் நெருக்கம் காட்டி வந்துள்ளார். இது தொடர்பான விவகாரம் பெரிதாக அவ்வப்போது வெளிவந்து வண்ணம் உள்ளது. இதில் கொலையான ரேணுகா சாமி நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார்.

இவர் பவித்ராவுடன் நெருங்கி பழகுவதால் தர்ஷனின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும், அவருடைய குடும்ப வாழ்க்கை பிரச்சினை ஏற்பட்டு வருவதாகவும் நினைத்துள்ளார். இதனால் பவித்ரா கௌடாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவருடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமான குறுந் தகவல்களை ரேணுகா சாமி அனுப்பிவந்துள்ளார். இது குறித்து தெரிய வந்த தர்ஷன் சித்ரதுர்கா மாவட்ட ரசிகர் மன்ற தலைவரை அழைத்து பேசியுள்ளார்.

அதன்படி ரேணுகாசாமியை பெங்களூர் அழைத்து வரும்படியும் கூறியுள்ளார். பின்னர் ரேணுகா சாமியை கடந்த எட்டாம் தேதி இரவு காரில் ராகவேந்திரா தர்ஷன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ராகவேந்திரா உள்ளிட்ட 11 பேரும் ரேணுகா சாமியை சராசரியாக தாக்கியும், ஆங்காங்கே சிகரெட் சூடு வைத்தும், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து தாக்கியும் உள்ளனர். இதனால் ரேணுகா சாமி அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனால் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கௌடாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த கொலை வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.