“தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” – கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் நேரு! பரபரக்கும் அரசியல்களம் 

கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழி குறித்து கமல் தெரிவித்த கருத்தே தற்போது பரபரப்பான விவகாரமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் கன்னட மொழியின் பிறப்பு குறித்து தெரிவித்த கருத்து அடிப்படையில் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு கமலுக்கு ஆதரவு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆரம்பம் முதல் கமல் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் கமல் கூட்டணி வகிக்கும் திமுக தலைவர்கள் பெரும்பாலோனோர் அமைதி காத்து வந்தனர்.

தக் லைஃப் திரைப்பட விழாவில் வெடித்த சர்ச்சை

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தக் லைஃப் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், நடிகர் கமல்தமிழிலிருந்துதான் கன்னடம் உருவானது” என கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலையில் கூறினார். இது கர்நாடகாவில் தீவிர எதிர்ப்பை கிளப்பியது. பல கன்னட அமைப்புகள் கமலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டன. தக் லைஃப் திரைப்படம் வெளியாவதை தடுக்க பல விதங்களில் மிரட்டல்கள் வந்தன.

மன்னிப்பு கேட்க வேண்டும் என அழுத்தம் – கமல் மறுப்பு

இந்த சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலிடம் அழுத்தம் வந்தபோதும், கமல் தன்னிடம் தவறு இல்லை என மறுத்தார். இதையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், திரைப்படத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, இது ஜூன் 10ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் கே.என்.நேரு பாராட்டு – “கமல் தவறாக பேசவில்லை”

இந்நிலையில், திருச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த அமைச்சர் கே.என்.நேரு, செய்தியாளர்களிடம் கூறுகையில்:

தமிழிலிருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் வந்தன. கமல் கூறியதில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்து வரலாற்று அடிப்படையிலான உண்மை,” என தெரிவித்தார். கமலுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியின் மூத்த தலைவரும் ஆளும் கட்சி அமைச்சருமான கே.என்.நேரு கருத்து தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.