கன்னியாகுமரி இடைத்தேர்தல்! வேட்பாளரை அறிவித்த முக்கிய கட்சி!

Photo of author

By Sakthi

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தற்சமயம் கூட்டணி தொகுதி பங்கீடு போன்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்தவிதத்தில் நேற்றைய தினம் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின்படி பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு அதிமுக தன்னுடைய முழுமையான ஆதரவை கொடுக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

திரு பொன் ராதாகிருஷ்ணன் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் இதே கன்னியாகுமரி தொகுதியில் நின்று மகத்தான வெற்றி பெற்றார். அதோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவிற்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தான் என்றும் தெரிவிக்கப்படுகிறது.ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இதே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்த குமாரிடம் தோல்வியைத் தழுவினார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் சமீபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருந்து வந்தது.

ஆகவே எதிர் வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டு சேர்த்து கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தி விடலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்ததையடுத்து பாஜக சார்பாக ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார் இந்த நிலையில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அதிமுக முழு ஆதரவை கொடுத்திருக்கின்றது.