அமைதியான சூழலைக் கெடுக்கப் பார்க்கிறார் மாரி செல்வராஜ்!கர்ணன் படத்தை தடை செய்ய புகார்!
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் நடிக்கும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை சார்பாக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாரட்டப்பட்டார். இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த ஓராண்டாக நடந்த திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவுற்று இப்போது கர்ணன் எனப் பெயர் சூட்டப்பட்டு அந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாஞ்சோலை கலவரத்தில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் தனுஷ் தேயிலை தோட்ட தொழிலாளியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை எனும் அமைப்பைச் சேர்ந்த அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் என்பவர் காவல்துறையில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் ’1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது.
குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படஙகள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.