நாடக காதலுக்கு எதிராக கேரள முதல்வர் எடுத்த அதிரடி! பெற்றோர்கள் மகிழ்ச்சி
நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து குற்றங்களும் அவ்வப்போது நடந்து கொண்டேயுள்ளது.குறிப்பாக காதல் என்ற பெயரில் அதிக அளவிலான குற்றங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது.இந்நிலையில் இதற்கு எதிராக கேரளா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
காதலை ஏற்க மறுக்கும் பெண்களை துன்புறுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். தற்போது கேரளாவில் காதலை ஏற்கவில்லை என்ற காரணத்தினால் நிறைய இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படும் சம்பவங்களானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டத்தில் 24 வயது நிரம்பிய மருத்துவ மாணவி ஒருவர் அவரது நண்பர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கொலை செய்தவர் சமூக ஊடகம் மூலமாக பழக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர் தாமஸ் சட்டப்பேரவையில் எழுப்பினார். இதனையடுத்து அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், தொடர்ந்து காதல் என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவோருக்கு எதிராக காவல்துறை எப்போதும் மென்மையாக நடந்துகொள்ளாது என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து காதலை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவது உறுதி என்றும் எச்சரித்தார். குறிப்பாக பெண்களை அச்சுறுத்துதல், பின்தொடருதல் உள்ளிட்ட புகாருக்கு ஆளானவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணைய பயன்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மக்கள் பிரதிநிதிகள் யாரும் வரதட்சணை திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், அவர்கள் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்கள் மீதான சைபர் தாக்குதல் உள்ளிட்ட வழக்குகளில் தற்போதுள்ள சட்டம் மேலும் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் அப்போது உறுதியளித்தார்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ராஜஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக கேரளா தான் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1455 வழக்குகள் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்காகப் பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வெளியான திரௌபதி என்ற திரைப்படத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பெரும்பாலான குற்றங்களுக்கு ஒரு தலைபட்சமாக நடக்கும் நாடக காதலே என்ற காரணத்தை தெரிவித்திருந்தனர்.அதை உறுதி செய்யும் வகையில் கேரளா முதலமைச்சர் காதலை காரணமாக வைத்து பெண்களை துன்புறுத்தும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.