ஏமாற்றத்தால் விரக்தி அடைந்த நடிகை கௌதமி ட்விட்!

Photo of author

By Sakthi

நடிகைகள் நமீதா, கௌதமி, குஷ்பூ, ஆகிய மூவருமே திரைத்துறையில் ஒரு காலத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த மூன்று பேருமே தற்சமயம் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருவது பாஜகவிற்கு மேலும் பலமாக கருதப்படுகின்றது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை குஷ்பு உடனடியாக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதேபோல நடிகை கௌதமி அவர்களும் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

அந்தவிதத்தில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கு நடிகை குஷ்பூ விருப்பம் தெரிவித்திருந்தார். அதேபோல ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட நடிகை கௌதமி விரும்பினார். இருவருமே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பிருந்தே தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டார்கள். நடிகை கௌதமி இராஜபாளையம் தொகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கேயே தங்கி கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து வந்தார். அதேபோல பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என்று அனைவரும் கௌதமியை வெற்றிபெற வைக்குமாறு பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிக்கப்பட்டது. அதில் சேப்பாக்கம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது இராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக தற்போதைய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி களமிறங்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கௌதமி குஷ்பூ ஆகிய இருவருமே ஏமாற்றம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, கௌதமி குஷ்பு ஆகிய இருவருமே வேறு எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் தொடர்பாக நடிகை கௌதமி வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இதுகுறித்து கௌதமி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, உங்களில் ஒருவராக, உங்களின் சகோதரியாக, என்னை பாவித்து கடந்த 5 மாத காலமாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கொடுத்தீர்கள் என தெரிவித்து இருக்கிறார்.

அதோடு எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி உங்களுக்கு நான் கட்டுப்பட்டு இருக்கின்றேன். உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன் என்று தெரிவித்து இருக்கிறார் நடிகை கௌதமி.