சக மாணவார்களின் கேலி: தற்கொலை செய்துகொள்வேன் என சொல்லி அழுகை! நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
ஆஸ்திரேலியாவில் 9 வயதாகும் சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம் தான் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக அழும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த குவாடன் எனும் சிறுவன் அவன் தாயோடு வசித்து வருகிறான. அந்த ஒன்பது வயது சிறுவனுக்கு அகான்ட்ரோபலாசியா எனும் வினோதமான நோய் உள்ளது. இந்த நோய் எலும்புகளை வளர்ச்சி அடைய விடாமல் தடுக்கும் ஒரு நோயாகும். இந்த குறைபாடு பிறவியிலேயே ஏற்படுவதாகும். இதனால் சக வயதுள்ளவர்களை விட உயரத்தில் குள்ளமாக இருக்கும் குவாடன் அதற்காக சுற்றி இருக்கும் அனைவராலும் கேலி செய்யப்பட்ட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சக மாணவர்களும் அவரை இதனால் கேலி செய்வதும் அடிப்பதுமாக இருந்ததால் மனமுடைந்த அவர் தன் தாயிடம் தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாக சொல்லி அழுதுள்ளார்.
அதை அவர் ஒரு வீடியோவாக எடுத்துள்ளார் அவரது தாயார். அந்த வீடியோவில் ‘ ஒரு கயிறு கொடுங்கள் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இல்லையென்றால் என்னை நீங்களே கொலை செய்துவிடுங்கள். என்னுடைய இதயத்தில் கத்தியால் குத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.’ என அழுது மன்றாடுகிறான்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த குவாடனின் தாய்‘ ஒரு தாயாக நான் எனது பொறுப்புகளில் இருந்து நான் தவறிவிட்டேன். அதுபோல இந்த கல்வித்திட்டமும் தோற்றுவிட்டது.உடல் ரீதியான கேலிகள், குழந்தைகள் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லுங்கள். ஒரு மாணவன் குவாடனை தலையில் அடிப்பதை நானே பார்த்தேன். ஆனால் பள்ளியில் புகார் செய்தால் பிரச்சனை ஏற்படும் எனத் தெரிந்த அவன் அவனிடம் இருந்து தப்பித்து வந்து காரில் ஏறிய குவாடன் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழ ஆரம்பித்தான்’ எனத் தெரிவித்துள்ளார்.
9 வயது சிறுவனின் மனதில் தற்கொலை எண்ணம் தோன்றியுள்ளது என்றால் அவன் எவ்வளவு மனக்கஷ்டங்களை அனுபவித்து இருப்பான் என்ற சோகம் மனதைப் பிழிகிறது.