அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்!
சதுரகிரி மகாலிங்கம் கோவில் மலையடிவார வாழைத்தோப்பு பகுதியில்,மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மலையடிவார பகுதியில் வசிக்கும் கன்னியப்பன் என்பவருடைய மகன் ரமேஷ் என்பவர், இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகின்றார்.ஒரு மாதத்திற்கு முன்பு ரமேஷின் அண்ணன் இதயக்கனி என்பவர் இவர்களின் உறவுக்கார பெண்ணான புனிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்ததால் புனிதாவின் பெற்றோர்கள் சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பெயரில்,ரமேஷின் குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்து விசாரித்து விட்டு அனுப்பி வைத்துவிட்டனர்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு,விசாரணை இருப்பதாக சாப்டுர் எஸ்ஐ ஜெயகண்ணன் மற்றும் சில காவல் துறை அதிகாரிகள்,ரமேஷ்-யை அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் ரமேஷ் அன்று இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை.இந்நிலையில் நேற்று காலை வாழைத்தோப்பு பெருமாள்குட்டம்பாறை,உச்சி மரத்தில் ரமேஷ் பிணமாக தூக்கில் தொங்கி கிடந்தார்.
தகவல் அறிந்த அப்பகுதிமக்கள் அவ்விடத்தில் திரண்டனர்.
காவல்துறையினர் ரமேஷின் உடலை மீட்க முயன்ற பொழுது பொதுமக்கள் முற்றுகையிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்ற ரமேசை காவல்துறையினரே அடித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டதாகவும்,அவரின் இறப்புக்கு காவல்துறையே காரணம் என்று பொது மக்கள் முறையிட்டனர்.
இந்நிலையில்,தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் ரமேஷின் அண்ணனான இதயக்கனி,தனது தம்பியின் இறப்பிற்கு காவல்துறை தான் காரணம் என்றும், அவர்கள் தான் தனது தம்பியை அடித்து கொன்று விட்டனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்தார்.மேலும் விசாரணை என்ற பெயரில் தனது தம்பியையும் அம்மாவையும் அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாகவும் இதயக்கனி தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து எஸ்பி சுஜித்குமாரின் உத்தரவின்படி சாப்டுர்
எஸ்ஐ.ஜெயகண்ணன் மற்றும் இவருக்கு துணை நின்ற நான்கு காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நேற்று 6 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டமானது எஸ்பி
சுஜித்குமாரின் பேச்சுவார்த்தையினால்
பிற்பகல் 3 மணிக்கு அப்பகுதி மக்களால் கைவிடப்பட்டது. மேலும் காவல்துறையினர், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.