மீண்டும் கொடைக்கானல் செல்ல அனுமதி! சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாத் தலங்கள் கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படாத நிலையில் நேற்றைய முன்தினம் சுற்றுலாத் தலங்களுக்கான தளர்வுகளை அறிவித்தார் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள் வழக்கம்போல் செயல்படும்.
கொடைக்கானலில் சுற்றுலாவாசிகள் வருவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் முதலே தடை விதிக்கப்பட்டிருந்தது.மேலும் கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களில் நேரம் செலவிட சுற்றுலாவாசிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தற்போது சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டதால் பொதுமக்களும் சுற்றுலாவாசிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கொடைக்கானலில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யவும் பூங்காக்களில் குழந்தைகள் விளையாடவும் பசுமை பள்ளத்தாக்கு மற்றும் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளை பார்வையிடவும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.இதனால் சுற்றுலாவை நம்பி வேலை செய்யும் பணியாளர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
ஊட்டி,ஏற்காடு உள்ளிட்ட பல சுற்றுலா இடங்களும் இன்று திறக்கப்படுகிறது.சமீப காலங்களில் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் மலைப் பிரதேசங்களில் வானிலை சில்லென்று இருக்கும்.இந்த நேரத்தில் இயற்கையை ரசிக்கவும் மழைக்கால குளிரை அனுபவிக்கவும் பொது மக்கள் விரும்புவர்.சுற்றுலாத்துறையும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கக் காத்திருக்கிறது.மேலும் படகு இல்லங்கள்,பூங்காக்கள் போன்றவை தொடர்ந்து இயங்கும் அளவிற்கு ஏற்பாடுகளை சுற்றுலாத் துறை செய்துள்ளது.குடும்பத்துடனும்,நண்பர்களுடனும் மலைப் பிரதேசங்களை கண்டுகளிக்க மக்கள் தயாராகி விட்டனர்.இனி கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு சுற்றுலாத் தளங்கள் திரும்பிவிடும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அரசும் சரியான நடைமுறைகளை பின்பற்றி சுற்றுலா வாசிகள் பயனடைய கேட்டுக் கொண்டுள்ளது.