ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் கடந்த 2017ஆம் வருடம் காவலாளியை கொலை செய்து ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து வாளையார் மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
3 வருட காலமாக இந்த வழக்கு ஊட்டியில் இருக்கின்ற மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணை மறுபடியும் நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி ,ஜாய்தீபு, உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
சாலை விபத்தில் பலியான கனகராஜின் அண்ணன் தனபால், கனகராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், உட்பட இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை காவல்துறையினர் மறுபடியும் விசாரணை செய்தார்கள்.
நேற்றையதினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, நோய் தொற்று பரவல் காரணமாக, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. வாளையார் மனோஜ் ,உள்ளிட்டோரும் ஆஜராயினர். அரசு சார்பாக வழக்கறிஞர் ஷாஜகான் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சென்னையிலிருந்து ஆஜரானார்.
காவல்துறையினரும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராகி இருந்தார்கள் இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.
கொடநாடு கொலை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தனபால், ரமேஷ், உள்ளிட்டோரை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சோலூர்மட்டம் காவல்துறையினர் கைது செய்தார்கள்.
இவர்கள் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள். இந்த சூழ்நிலையில், இவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சஞ்சய்பாபா நேற்று உத்தரவிட்டார். இவர்கள் வழக்கு முடியும்வரை ஊட்டியில் தங்கியிருந்து நாள்தோறும் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி.