உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று

Photo of author

By Anand

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த திட்டமிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை நியமித்தார். இதனையடுத்து சென்னையில் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் கொரோனா குறித்த ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.இந்நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனையும் செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பானது ஆரம்ப நிலையில் உள்ளதால், வீட்டுக்கு சென்று அவரை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என்று மருத்துவ குழுவினர் கூறிய நிலையிலும், அமைச்சர் அன்பழகன் மருத்துவமனையில் தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும்,அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.