Vijay Tvk: நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜயாக மாறிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. வாரிசு படத்தில் நடிக்கும்போதே இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார்.
அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் அவர் மும்முரமாக ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.
விஜயின் அரசியல் வருகை அதிமுக, திமுக, பாஜக, நாதக போன்ற எல்லா கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். எனவே, எல்லோருமே விஜயை விமர்சிக்கவும், திட்டவும் துவங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது ‘விஜய் இன்னும் மக்களையே சந்திக்கவில்லை. நான்கு சுவர்களுக்குள் இரண்டு ஆண்டுகால அரசியலை முடித்துவிட்டார். களத்தில் இறங்கி அவர் அரசியல் செய்ய வேண்டும்’ என பேசியிருக்கிறார்.