சமீபத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்.
திடீரென்று திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த இவர் பாஜகவில் இணைந்தது பற்றி விசாரித்த போது பாஜக சார்பாக இவருக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இதற்கு முன்பு வகித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் பதவியை துரைசாமிக்கு வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும், மேலும் இது குறித்து பாஜகவின் தேசியத் தலைவர் நட்டாவிடம் அவர் பேசியிருப்பதாகவும் சொல்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்த துரைசாமியைத் தொடர்ந்து திமுகவிலிருந்து இன்னும் சில முக்கியத் பிரமுகர்கள் கமலாலயம் நோக்கி வருவார்கள் எனவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.அதில் கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைவது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமாக திமுகவில் இருக்கும் அதிருப்தியாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க பாஜக தலைமை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்பது உறுதியாகிறது. பாஜகவின் இந்தச் செயலால் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.