நடைபெறுமா வாக்கு எண்ணிக்கை? உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட புதிய வழக்கு!

Photo of author

By Sakthi

தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் முழுமையாக தேர்தல் முடிந்து விட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் இன்றைய தினம் கடைசி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றம் தற்போது நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் தேர்தல் பரப்புரையின் போது மாநாடுகளை ஏன் தடுக்கவில்லை. அது தொடர்பான விளக்கத்தை 30-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கூடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு தடை வேண்டும் என்று தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்து இருக்கிறார். அந்த வழக்கில் தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் பண பலத்தை தடுப்பதற்கு இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அறிவிப்பின் போது தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்து இருந்ததாகவும், ஆனாலும் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக சார்பாக பணப்பட்டுவாடா நடைபெற்றதாக தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் பல தொகுதிகளில் நடைபெற்ற பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழ்நாட்டில் மட்டும் 430 கோடி ரூபாய் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து இருக்கிறார்கள் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார்.

பணப்பட்டுவாடா குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமனம் செய்து விசாரணை நடத்த கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும், அவர் கொடுத்திருக்கின்ற புகாரை பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விரைவாக விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.