’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில்
வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுவிதமான தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையில்தான் கூட்டணி அமைந்து ஒரு திராவிட கட்சி ஆளும் கட்சியாகவும் இன்னொரு கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்து இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை ஒரே நேரத்தில் சந்திக்கும் கூட்டணி ஒன்றை அமைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்று கூட்டணி தேவை என எதிர்பார்க்கும் மக்களுக்கு இந்த கூட்டணி ஒரு மாற்றாக இருக்குமா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரியவரும்
இந்த நிலையில் ரஜினி கமல் கூட்டணியை அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதில் இருந்தே மக்களின் ஆதரவு இந்த கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே ரஜினி கமல் கூட்டணி குறித்து முதலமைச்சர் முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் கிட்டத்தட்ட விமர்சனம் செய்துவிட்ட நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்களும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தவறான ஒன்று என்பது எனது கருத்து என்றும் 2021 ஆம் ஆண்டில் ’அதிசயம் நிகழும்’ என்ற சினிமா வேண்டுமானால் வரும், ஆனால் எந்த அதிசயமும் நிகழாது என்றும் கூறியுள்ளார்
கே.எஸ்.அழகிரியின் இந்த கருத்து கமல் ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி கூறியவாறு உண்மையில் அதிசயம் நிகழுமா? அல்லது கே.எஸ்.அழகிரி கூறியவாறு அந்த பெயரில் ஒரு திரைப்படம்தான் வருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்