2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் தடம் பதித்தவர் நயன்தாரா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முதல் இடத்தில் நிலைத்து நிற்கிறார். இன்றளவும் கதாநாயகர்குளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவர் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் பாராட்டப்படுகிறார்.
2005ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாராவிற்கு அடுத்த படமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது. அதற்கடுத்து அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என மிகப்பெரிய ஹீரோக்களுடன் திரைக்களத்தை பகிர்ந்தார்.
திரை வாழ்க்கையில் என்றுமே ஜொலிக்கும் நட்சத்திரமாக இருந்தாலும் அவரது சொந்த வாழ்க்கையில் அடுத்தடுத்து பல சறுக்குகளையும், வீழ்ச்சிகளையுமே ஆரம்ப காலத்தில் சந்தித்து வந்தார்.
பாலிவுட் கதாநாயகிகளுக்கு இணையாக சர்ச்சைகளுக்கும் பேர் போனவர் நயன்தாரா.
ஆரம்ப காலத்தில் சிம்புவுடனான காதல் முறிவு, பிரபுதேவாவுடனான திருமண ஏற்பாடு, மதமாற்றம் , கையில் பிரபுதேவாவின் பெயர் டாட்டூ என அடுத்தடுத்த சர்ச்சைகள் அயராத வண்ணம் வந்து கொண்டுதான் இருந்தன.
நடன இயக்குனர் பிரபுதேவாவுடனான காதலுக்கு பிறகு அவரையே திருமணம் செய்ய போவதாகவும், சினிமாவை விட்டு விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் விலகியே இருந்தார். பிறப்பில் கிருஸ்துவரான இவர் பிரபுதேவாவிற்காக இந்துவாக மதம் மாறினார்.
திடீரென நயன்தாராவுக்கு பிரபுதேவாவுடனான காதல் மனமுறிவு அடைந்தது. அந்த காதல் முறிவுக்கு பிறகு நயன்தாரா தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
பொதுவாக பல கதாநாயகிகளுக்கு ரீஎன்ட்ரி வெற்றிப்பாதையாக அமைந்தது இல்லை. ஆனால் நயன்தாராவிற்கு தென்னிந்திய சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அடுத்தடுத்து ஹிட் படங்களை வாரி வழங்கினார்.
வெற்றிப்பாதையில் வலம் வந்தாலும் நயன்தாராவை பல சர்ச்சைகளும் சூழ்ந்து கொண்டுதான் இருந்தன. உடன் நடிக்கும் நடிகர்களுடன் பல வகையிலும் கிசுகிசுக்கப்பட்டு தான் வந்தார்.
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடித்தார். அந்த படமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது, அத்தோடு விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதலும் மலர்ந்தது.
இருவரும் காதலில் இருப்பதை எந்தவித ஒளிவுமறைவுமின்றி மீடியாக்களின் முன் தோன்றினர். விக்னேஷ் சிவனும் அவ்வப்போது இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு நயன்தாரா அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
தற்போது நயன்தாரா வெளி நிறுவனுங்களின் படங்களை தவிர்த்து வருகிறார். விக்னேஷ் சிவனின் காதுவாக்குல ரெண்டு காதல், சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த, அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடனும் நடித்து வருகிறார். வெளி நிறுவனுங்களுக்கு படங்கள் ஒப்புக்கொள்ளாமல் தனது சொந்த நிறுவனத்திலேயே சில படங்களை நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பாக்கப்படுகிறது.