நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் இத்தனை லட்சமா? உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Photo of author

By Sakthi

கொரோனா பாதிப்பு மற்றும் மற்ற நோய்களால் 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் 1.47 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்களுடைய பெற்றோரை இழந்து இருக்கிறார்கள். நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடைய பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நாட்டில் நோய்தொற்று காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த நோய் தொற்று பரவ தொடங்கியது முதல் தற்போது வரையில் நோய்த்தொற்று போன்ற பல்வேறு நோய்கள் காரணமாக, 1.47 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தாயையோ அல்லது தந்தையையோ இல்லையென்றால் இருவரையுமே இழந்திருக்கிறார்கள். இதில் 70508 பேர் சிறுவர்கள், 70 ,980 பேர் சிறுமியர், 4 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். ஒடிசா மாநிலத்தில் அதிகபட்சமாக 24 ,105 குழந்தைகள் பெற்றோரை இழந்து இருக்கிறார்கள்.

மராட்டிய மாநிலத்தில் 19223 குழந்தைகளும், குஜராத் மாநிலத்தில் 14,770 குழந்தைகளும், தமிழ்நாட்டில் 11 ,014 பேரும் தங்களுடைய பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ இழந்திருக்கிறார்கள் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கிறது.

வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களுடன் காணொலிக் காட்சியின் மூலமாக கூட்டமொன்று நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.