பாமக அதிமுக கூட்டணி தொடருமா? அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் நிகழ்வுகளை கவனிக்கும் போது அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி தொடருமா? இல்லையா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும் இரண்டு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழக மக்களுக்கும்,அதிமுக மற்றும் பாமக கட்சி தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருந்த சந்தேகத்தையும், செய்திகளில் வெளியான சர்ச்சைகளுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக அதிமுக கூட்டணியில் தொடரும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் பாமகவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அவர் அறிவித்துள்ளது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
மேலும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் பாமக தொடரும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் அவர்களின் இந்த பேட்டி மூலம் அதிமுக தரப்பும் உற்சாகம் அடைந்துள்ளது. இதன் மூலமாக வடதமிழகத்தில் கணிசமான இடங்களை வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக அன்புமணி ராமதாஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசுவதை வைத்து, பாமக கூட்டணியில் இருந்து பிரிந்துவிடுமோ என்ற சந்தேகத்துடன் இருந்தது அதிமுக தரப்பு . ஆனால் அந்த சந்தேகத்தையெல்லாம் போக்கும் வகையில் தற்போது அன்புமணி ராமதாஸ் பேட்டி கொடுத்திருப்பது அதிமுக மட்டுமன்றி பாமக நிர்வாகிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பேட்டியின் போது தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்க வேண்டிய ஒன்று என்றும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே தனது நோக்கமும், விருப்பமும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்என்றும் அவர் கேட்டு கொண்டார்.