நீட் தேர்வு ரத்து? தமிழக சட்டசபையில் வருகிறது புதிய சட்டம்!

Photo of author

By Sakthi

தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் நேற்றைய தினம் சுகாதாரத் துறை மீதான மானிய கோரிக்கை நடந்தது. அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த ஒரு கொள்கை குறிப்பில் தமிழக அரசு மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்விற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மருத்துவ படிப்பிற்கான இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு பெற்றுத் தருவதில் இருக்கின்ற சிரமங்களை கருத்தில் வைத்து முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து இருக்கின்றார்.

இந்த குழு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை அடிப்படையாக வைத்திருக்கின்ற மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக பொருளாதார மற்றும் கூட்டாட்சி முறையை மிக மோசமாக பாதிப்பு அடைய செய்கிறதா? கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் அதோடு வேறு பிரிவு மாணவர்களை பாதிப்படைய செய்கிறதா என்பதையும் அப்படி பாதிப்படைய செய்தால் அதனை களைய எடுக்கப்பட வேண்டிய உரிய முன்னெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு செய்தது தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியது இந்த குழு.

இந்தக் குழுவின் பரிந்துரையை ஆராய தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட ஒரு உயர்மட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழக மாநிலச் சட்டம் 3/2007 போன்று ஒரு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முயற்சி செய்யலாம் என்று இந்த குழு பரிந்துரை செய்து இருக்கிறது.