Vijay: நடிகர் விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்தது தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எனும் புதிய கட்சியை தொடங்கினார். தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா என ஆரம்பத்தில், அவரது அரசியல் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது தமிழக அரசியலில் ஒரு வலுவான அணியாக திகழ்வதற்கான சவால்கள் அவரை சூழ்ந்து கொண்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடக்கம்
விஜய் தனது கட்சியை தொடங்கியதும், இளைஞர்களிடையே பெரும் ஆதரவை பெற்றார். அவர் தூய்மை, ஊழலற்ற நிர்வாகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை முன்னிலைப்படுத்தினார். ஆனால், தேர்தலில் வெற்றிபெற ஒரு வலுவான கூட்டணி ஆதரவு அவசியம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
முதல் மாநாடு – கூட்டணிக்கான எதிர்பார்ப்பு
தவெக கட்சியின் முதல் மாநாடு மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது. இதில், விஜய் எந்தக் கட்சியுடனும் இணைகுறது பற்றி தெளிவாக வெளிப்படுத்தவில்லை. அவர் பாஜகவையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்தாலும், அதிமுகவின் பெயரை சொல்லாமல் இருந்து கவனம் ஈர்த்தார். இதனால், அவருக்கு அதிமுகவுடன் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு
தவெக கட்சியின் முதல் மாநாட்டில் பேசிய அவர் தன்னுடன் கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிப்பதாக கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இவருடைய இந்த பேச்சு பலமாக இருக்கும் திமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்தது.
அதிமுகவுடனான கூட்டணி பேச்சு
இந்நிலையில் திடீரென விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் எந்த சிக்னலும் இரு தரப்பிலிருந்தும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் விஜய், தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதல்வர் பதவி உறுதியாக வழங்கப்பட்டால்தான் கூட்டணியில் சேருவேன் என்ற நிபந்தனை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு அதிமுக மறுப்பை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் உருவாகும் அதிமுக-பாஜக கூட்டணி
இந்நிலையில் சிக்கலை புரிந்து கொண்டு சுதாரித்த பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்தியது. அதற்காக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்கவும் தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் 2026 தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் நிலை தென்படுகிறது. இந்த கூட்டணி உறுதியாக அமைந்தால், விஜய்யின் கட்சி தனித்து போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவே, பாஜக தனது வாக்கு வங்கியை நிலைநிறுத்த அதிமுகவுடன் இணைந்து செயல்படத் தயாராகியுள்ளது. அப்படி இணைந்தால் ஆளும் திமுக மீதான எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் அந்த அணிக்கே செல்ல வாய்ப்புகள் அதிகம்.
தவெக தனித்து விடப்பட்டதா?
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானால், தவெக கட்சி தனிமைப்பட வாய்ப்பு உள்ளது. விஜய் எந்த கூட்டணியிலும் இணையாமல் தனித்து போட்டியிட்டால், வெற்றியின் வாய்ப்பு குறைவாகலாம். அதே நேரத்தில் அவரது ரசிகர் மன்றத்தின் எண்ணிக்கை வாக்கு வங்கியாக மாறுமா? அல்லது சாதாரண ஆதரவாகவே இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.
முதல்வர் பதவி கண்டிஷனோடு இருந்த விஜய்
விஜய் தனக்கு ஒரு வலுவான இடத்தை அரசியலில் பெற, கூட்டணி ஆதரவு முக்கியமானது. தற்போது அதிமுக-பாஜக இணைந்து செயல்பட்டால், விஜய்யின் அரசியல் எதிர்காலம் சிக்கலாகும். 2026 தேர்தலில் விஜய் தனித்து போட்டியிட்டால் அரசியல் அனாதையாக மாறுவாரா? அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவாரா? என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய தவெக இப்படி தனித்து விடப்பட காரணம் விஜய் முதல்வர் பதவி வேண்டும் என்ற கண்டிஷனில் உறுதியாக இருந்தது தான் என்று கூறப்படுகிறது.