விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பல ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ‘தளபதி 67’ படத்தின் அறிவிப்பு வந்துவிட்டது. ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு தற்போது ‘லியோ’ என்று அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன், த்ரிஷா இணைந்துள்ளார். லியோ படம் விஜய்க்கு மட்டும் 67-வது படமல்ல, த்ரிஷாவுக்கும் இது 67வது படம் என்பது ஸ்பெஷலான ஒன்று. பிரபல நடிகையான த்ரிஷா தமிழில் லேசா லேசா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஆர்யா, விஷால், சிம்பு மற்றும் தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார். இப்போது கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா ‘லியோ’ படம் மூலமாக விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார். விஜய்யுடன் திரிஷா இணைந்து நடிக்கும் ஐந்தாவது படம் இது, விஜய்-திரிஷா கெமிஸ்ட்ரி பல ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒன்று. ஒருபுறம் விஜய்-திரிஷா இருவரையும் ஒன்றாக திரையில் காண்பதை நினைத்து மகிழ்ச்சி, மறுபுறம் லோகேஷ்-விஜய் கூட்டணி மீண்டும் இணைவதை காண்பதை நினைத்து மகிழ்ச்சி என இரட்டிப்பு மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.
‘லியோ’ படத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன் சர்ஜா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், மேத்தியூ தாமஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார், இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.