ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

சமீபத்தில் நடைபெற்ற உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

அதேநேரம் காங்கிரஸ் கட்சியோ இந்த 5 மாநில தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி ஒரு புறம் பாஜகவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மறுபுறம் அந்தக் கட்சிக்கு சோகம் காத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டசபை தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மியின் வேட்பாளர் பகவந்த்மான் பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த சொந்த ஊரில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சராக முதன் முறையாக பதவி ஏற்றுக்கொண்ட பகவந்த் மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்டிருக்கின்ற வாழ்த்துச் செய்தியில் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த்மானுக்கு வாழ்த்துக்கள் பஞ்சாப் மாநில மக்களின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும், ஒன்றிணைந்து பணிபுரிவோம் என தெரிவித்திருக்கிறார்.