50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

0
72

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பு ஆண்டிலும் இடஒதுக்கீடு அளிக்காமல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இடைக்கால தீர்ப்பு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதில், நடப்பு கல்வி ஆண்டில் சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் 50 சதவீத இடங்களை ஒதுக்க அனுமதிக்க கூடாது என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து, சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கி நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது உச்சநீதிமன்றம். சமூகநீதியை மதிக்காத மத்திய பாஜக அரசுக்கு பதிலாக சமூகநீதியை பாதுகாக்க உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு மகத்தானது என்று கூறி அதனை வரவேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.

author avatar
Parthipan K