லிங்க் என்றாலே அது ஆபத்துதான்! சர்வதேச கருத்தரங்கில் டிஜிபி எச்சரிக்கை!
‘சைபர் கிரைம்’ தொடர்பான விழிப்புணர்வு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
இன்றைய நவீன காலத்தில் அனைவரும் செக்யூரிட்டி மற்றும் சைபர் கிரைம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். அதுவும் இளைய தலைமுறை மாணவ – மாணவிகள் நன்கு அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்கள் நான்கு விதமான மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் அதில் உடல் மொழி முக்கியமான ஒன்று.
இணையம் என்பது உலகளாவிய புத்தகமாகும். அதில் தேடினால் எல்லாமே கிடைக்கும். கிடைக்காதது என்று எதுவும் இல்லை. முன்பெல்லாம் வீட்டிற்கு வந்து பூட்டை உடைத்து தான் திருடினார்கள். ஆனால் தற்போது போன் மூலமாகவே எல்லாவற்றையும் செய்து விடுகிறார்கள். போன் செயலிகளின் மூலம் நிறைய பேர் பணம், தகவல், பொருட்கள் முதலியவற்றை இழந்து விடுகின்றனர்.
சைபர் செக்யூரிட்டி ஆனது நன்றாக இருக்க இன்றைய மாணவர்களாகிய நீங்கள் அதை நன்கு படிக்க வேண்டும். லிங்க்’ என்றாலே ஆபத்து தான். அது குறித்து விழிப்புணர்வு மிகவும் முக்கியமாகத் தேவை. யாராவது லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால், அது ஆபத்து என்று அர்த்தம். உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகம் கூகுள்தான். டிஜிட்டல் மையமாக இன்றைய உலகம் மாறி வருகிறது.
தமிழ்நாடு காவல்துறை காவல் உதவி என்ற செயலியை செயல்படுத்தி வருகிறது. இதில் 66 விதமான உதவிகள் உங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சீனாவில் அதிக ஹேக்கர்கள் உள்ளனர். அதிக படித்தவர்கள் இணைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அறிவாற்றல் கொண்ட மிக்க படித்தவர்கள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நமது நாட்டிற்கு அதிக பயிற்சி பெற்ற கணினி மென் பொறியாளர்கள் அதிகம் தேவைப்படுவதால் நீங்கள் அதை கற்றுக் கொண்டால் கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஹெலன் கெல்லர் பல அருமையான புத்தகங்கள் எழுதியுள்ளார். அவருக்கு கண் தெரியாது காது கேட்காது. பேச முடியாது. வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சாகச நிகழ்ச்சி. அதை சாகசம் என்று நினைக்காவிட்டால் அது வீண்.
உலகிலேயே மிகப்பெரிய பதவி என்பது படிப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள். இளமை மிகப் பெரிய சொத்து. இளமையில் நல்ல விஷயங்கள் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.