அரசியலுக்காக இப்படியும் பண்ணலாமா? மருத்துவர் ராமதாசுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டு – உண்மையென்ன?
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வீட்டில் மது பாட்டில் இருப்பதாக புகைப்படம் வைரலாகி வருகிறது. அதனை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அது வதந்தி என்று தற்போது நிரூபனமாகியுள்ளது. மது ஒழிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேர்தல் பிரச்சாரத்தில் மது ஒழிப்பு வாக்குறுதிகளையும் தொடர்ந்து கொடுத்து வரும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. சினிமாவிலும் கூட நடிகர்கள் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளில் நடிக்க கூடாது, அது இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணமாக மாறிவிடும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வீட்டில் மது பாட்டில் இருப்பதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. மற்ற அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் இயக்குநர் மோகன் ஜி மருத்துவர் ராமதாஸை சந்தித்த போது எடுக்கப்பட்டதாகும். அதில் தொலைபேசி வைக்கப்பட்டிருக்கும் மேசையின் கீழே இருக்கும் பாட்டிலை வட்டம் போட்டு காட்டி பலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் அது மது பாட்டில் இல்லை என்பது தற்போது உறுதியாகி உள்ளது. அந்த பச்சை நிற கண்ணாடி பாட்டிலானது ஆலிவ் ஆயில் பாட்டில் என்று தெரிய வந்துள்ளது. Colavita ஆலிவ் ஆயில் பாட்டிலின் வடிவமும், வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் பாட்டிலின் வடிவமும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்து இது மது பாட்டில் இல்லை என்று கண்டறிந்துள்ளனர். மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வீட்டின் மேசையில் வைக்கப்பட்டு இருந்த ஆலிவ் ஆயில் பாட்டிலை மது பாட்டில் என தவறான தகவலை பலர் பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அடிக்கடி பல வதந்திகள் பரப்பப்படுவது வழக்கமாகிவிட்டது. இது அரசியல் தலைவர்கள், நடிகர்களின் நற்பெயரை கெடுக்க சிலரால் வேண்டுமென்றே செய்யப்படும் விஷயமாகிவிட்டது. ஆனால் இந்த வதந்திகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதனை பலரும் நம்பி விடுகின்றனர். கருத்தியல் ரீதியாக ஒருவரை எதிர்ப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீது பொய்யான அவதூறு பரப்புவது மிகவும் மோசமான செயலாகும்.