தமிழக சட்டமன்றத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டது.தமிழக பட்ஜெட் வரலாற்றில் இ-பட்ஜெட் தாக்கல் செய்வது இதுவே முதல் முறை.தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மகளிருக்காக பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் முக்கிய அம்சமாக தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்ற பயனாளிகள் அனைவருக்கும் கடனை தள்ளுபடி செய்வதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தரப்பட்ட மொத்தம் 2756 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மகளிருக்கென்று சுய உதவிக் குழு இருப்பது சிறப்பு வாய்ந்தது.இந்தக் குழுவின் மூலம் பெண்கள் தங்கள் பொருளாதார சிக்கல்களையும் பல முன்னேற்றத் திட்டங்களையும் அவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு இந்த குழு செயல்பட்டு வருகிறது.மேலும் இந்திய அளவில் பல திட்டங்களுக்கு இந்தக் குழு முன்னோடியாக இருந்து வருகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்கள் குழு துவக்கிய ஆறு மாத காலத்திற்குப் பிறகு சரியான விதிமுறைகளை பின்பற்றி கடன் பெற தகுதிக் கணிப்பீடு செய்யப்படும்.தகுதிக் கணிப்பீட்டில் 75% மேல் தரம் பெற்ற குழுக்கள் வங்கிக் கடன் பெறத் தகுதி வாய்ந்தவையாகக் கருதப்படும்.75%க்கு குறைவாக பெற்ற குழுக்கள் 3 மாத இடைவெளியில் அடுத்த தர மதிப்பீட்டில் கலந்து கொள்ளலாம்.இந்த முறைப்படி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் தமிழகத்தில் பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.