மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை கடந்த 11ம் தேதி மேற்கொண்டார் பிரதமர் மோடி.
அதனைத் தொடர்ந்து 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் கடந்த திங்கட்கிழமை முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் அரசு கோரியிருந்த 2000 கோடி ரூபாய் விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும் மே 31ம் தேதி வரை தமிழகத்தில் ரயில், விமானங்களை இயக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைப் பற்றி பிரதமர், முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் அந்த கூட்டத்தில் பேசியது அறிக்கையாக வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் படி மே 31ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் அரியலூர் தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட சில தளர்வுகளை அறிவிக்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து இன்று அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.