தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் சென்னை பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் எந்தவிதமான விற்பனையும் நடத்த அனுமதி இல்லை. இருப்பினும் சில இடங்களில் காவல்துறைக்கு தெரியாமல் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் மாட்டுத் தீவனம் ஏற்றிச் செல்வதாக வாசகம் ஒட்டப்பட்ட மினி லாரி ஒன்றை தடுத்து சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் புதுப்பேட்டையில் இருந்து வடபழனிக்கு விற்பனை செய்ய 300 கிலோ கோழிகறி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்னர் கோழிகறியை மண்ணில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் மீன் விற்பனை செய்த நபர்களிடம் இருந்த மீன்களும் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.